மொசாம்பிக்கில் '1992 அமைதி ஒப்பந்தம்' முறிந்து விட்டதாக எதிர்க்கட்சி அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து
மொசாம்பிக்கில் இருந்து ஏனைய செய்திகள்
மொசாம்பிக்கின் அமைவிடம்

மொரோக்கோவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

செவ்வாய், அக்டோபர் 22, 2013

மொசாம்பிக் எதிர்க்கட்சியான ரெனாமோ இயக்கத்தின் தலைவர் அபோன்சோ திலாகாமாவின் இருப்பிடம் அரசுப் படையினரால் தாக்கப்பட்டதை அடுத்து 1992 ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தைத் தாம் முறித்துக் கொண்டு விட்டதாக அவ்வியக்கம் அறிவித்துள்ளது.


மொசாம்பிக்கின் மத்திய பகுதியான சத்துஞ்சிரா தளத்தை அரசுப் படையினர் தாக்கி கைப்பற்றினர். ஆனாலும் ரெனாமோ இயக்கத்தின் தலைவர் திலாகாமா அவ்விடத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


1975 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்த பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


உள்நாட்டுப் போர் முடிவடைந்தவுடன் நாட்டில் பொருளாதாரம் ஏற்றமடைந்திருந்தது.


நேற்று இடம்பெற்ற தாக்குதல் தமது தலைவரைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்டது என ரெனாமோ இயக்கப் பேச்சாளர் தெரிவித்தார். தாக்குதல் தொடர்பாக அரசுத்தலைவர் அர்மாண்டோ கிபுசா மீது எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


ரெனாமோ இயக்கம் நாட்டை மீண்டும் போர் முனைக்கு இட்டு செல்வதே நோக்கமாகக் கொண்டுள்ளதாக மொசாம்பிக்கின் பிரெலிமோ அரசு கூறியுள்ளது. இக்குற்றச்சாட்டை ரெனாமோ மறுத்து வந்துள்ளது.


கடந்த ஏப்ரலில் ரெனாமோ இயக்கம் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


மொசாம்பிக்கில் நவம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலும், அடுத்த ஆண்டில் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கிபூசாவின் பிரெலிமோ கட்சி 1975 முதல் ஆட்சியில் உள்ளது. இதே காலப்பகுதியில் உருவாக்கப்பட ரெனாமோ இயக்கம் தென்னாப்பிரிக்கா, மற்றும் சிம்பாப்வேயின் சிறுபான்மை அரசுகளினால் ஆதரவளிக்கப்பட்டு வந்தது.


மூலம்[தொகு]