உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் புலனாய்வுப் பிரிவினரால் கைது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 2, 2012

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் இலங்கைப் படைத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த் (கந்தர்மடம்), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜனமேஜயன் (புதுக்குடியிருப்பு), விஞ்ஞானப் பிரிவு மாணவர் சொலமன் (யாழ்), மருத்துவப் பிரிவு சுதர்சன் (உரும்பிராய்) ஆகியோரே இவ்வாறு யாழில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்கள் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சிறீடெலோ கட்சி அலுவலகம் மீது குண்டு வீசித் தாக்கியமை, புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டியமை ஆகியன இவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆகும்.

இக்கைதுகளை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது வகுப்புகளைக் காலவரையறையின்றி ஒன்றியொதுக்கல் செய்து வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி, சிரேட்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் புஸ்பரட்ணம், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் உட்பட்டோர் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி மற்றும் பிற பல தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒர் எதிர்ப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை அன்று ஒழுங்கு செய்துள்ளது.


மூலம்

[தொகு]