யேமனிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடங்களை மீட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 9, 2009


சவுதி அரேபியாவில் யேமனுடனான எல்லைப் பகுதியில் சென்றவாரம் ஊடுருவியிருந்த யேமேனிய கிளர்ச்சிக்காரர்கள் அப்பகுதியில் கைப்பற்றிருந்த பகுதிகளை அவர்களிடம் இருந்து மீட்டெடுத்துவிட்டதாக சவுதி அரேபிய அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் இதை மறுத்துள்ளனர். வட யேமனிலுள்ள இலக்குகள் மீது சவுதி விமானங்கள் தொடர்ந்தும் குண்டுவீசிவருவதாக அவர்கள் கூறுகின்றனர்.


கிளர்ச்சிக்காரர்கள் ஊடுருவியபோது சவுதி அரேபிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து ஒரு வாரத்துக்கு முன்பு தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்ததாகவும், தங்களது நிலப்பரப்புக்குள்ளேயே தாக்குதல் நடத்தியதாகவும் சவுதியரேபியா கூறுகிறது.


சவுதி படையினர் சிலரை சிறைபிடித்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுவதையும் சவுதி அதிகாரிகள் மறுக்கின்றனர்.


ஆனால் சவுதி படையினர் மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும் நான்கு பேரைக் காணவில்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், யேமனிய போர் ஜெட் விமானம் ஒன்றை ஞாயிறன்று தாம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக யேமனியக் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனை மறுத்துள்ள யேமனிய அரசு தமது விமானம் தொழிநுட்பக் கோளாறினாலேயே விபத்துக்குளாகியதாகத் தெரிவித்துள்ளது.


நான்கு மாதங்களில் போர் ஆரம்பித்ததில் இருந்து யேமனின் மூன்றாவது போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]