ரங்கூன் குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 15, 2010

பர்மாவின் (மியான்மர்) முன்னாள் தலைநகரான ரங்கூனில் (யங்கோன்) இன்று இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்தனர்.


மியான்மர் (பர்மா)

கண்டாவாகி ஆற்றின் அருகே உள்ள ஒரு பூங்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குண்டுகள் வெடித்தன. இன்று மாலை உள்ளூர் நேரப்படி 1500 (0830 கிரீனிச் நேரம்) மணிக்கு இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.


30 பேர் வரையில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ரங்கூன் நகரில் வன்முறைகள் இடம்பெறுவது வழக்கம் என பிபிசி செய்தியாளர் அறிவிக்கிறார். பொதுவாக இத்தகைய குண்டுவெடிப்புகளுக்கு சுயாட்சி கேட்டுப் போராடும் இனக்குழுக்கள் மீது பர்மிய அதிகாரிகள் குற்றம் சாட்டுவது வழக்கம்.


ஆனால் பெருமளவு உயிரிழப்புடன் கூடிய இப்படியான திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்புகள் அங்கு அபூர்வம்.


இரண்டு சதாப்தங்களுக்குப் பின்னர் பர்மாவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் விதிகள் நியாயத்துக்குப் புறம்பானவை எனக் காரணம் காட்டி முக்கிய எதிர்க்கட்சியான ஆங் சான் சூ கீயின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி இத்தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தது.

மூலம்[தொகு]