ரஷ்ய மனித உரிமைச் செயற்பாட்டாளர் கடத்தப்பட்டுப் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 15, 2009 செச்சினியா, ரஷ்யா:


செச்சின்யாவைச் சேர்ந்த முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான நத்தாலியா எஸ்டிமிரோவா கடத்தப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாக ரஷ்யாவின் தென்பகுதி நிர்வாகம் கூறியுள்ளது.


செச்சினியாவின் அண்டை மாநிலமான இங்குசேத்தியாவில் உள்ள காட்டில் இருந்து எஸ்டிமிரோவாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


ஜூலை 15, புதனன்று காலை செச்சினியத் தலைநகர் குரொஸ்னியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நான்கு ஆயுதபாணிகளால் வான் ஒன்றில் அவர் கடத்தப்பட்டபோது, அவர் அலறியதை பலர் கேட்டிருக்கிறார்கள்.


இப்படுகொலைக்கு ரஷ்ய அதிபர் திமீத்ரி மெத்வேதொவ் தனது ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன் உயர்மட்ட விசாரணைக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.


எஸ்டிமிரோவா "மெமோரியல்" என்ற மனித உரிமை அமைப்புக்காக செச்சினியாவில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆவணங்களைச் சேகரித்து வந்திருந்தார். பழைய சோவியத் காலத்தில் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இக்குழு ஆராய்ந்தூ வருகிறது. எஸ்டிமிரோவா, 2006 ஆம் ஆண்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரஷ்ய செய்தியாளரான அனா பொலிட்கோவஸ்காயா அவர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.


அண்மைக்காலங்களில் எஸ்டிமிரோவா அரச சார்பு ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]