ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி விடுதலை கோரி உண்ணாநிலைப் போராட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டம்பர் 21, 2009, சென்னை:


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் ஒருவரான நளினி மற்ற ஆயுள் தண்டனை கைதிகளைப்போல தம்மையும் பாவித்து சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இன்று திங்கட்கிழமை 21 செப்டம்பர் முதல் வேலூர் சிறையில் காலவரையற்ற உண்ணாநிலையைத் துவங்கியுள்ளார்.


இந்திய நீதிமன்றங்களால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், சிறைக்குள் அவர்கள் நடந்துகொண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப்பிறகு விடுதலை செய்யப்படுவது வழமை.


அந்த அளவுகோளின் கீழ் 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.


இந்த வழக்கின் விசாரணையை தமிழக அரசு வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும், தம்மை விடுதலை செய்யாமல் காலம் கடத்துவதாகவும் கூறும் நளினி, திங்கட்கிழமை முதல் கால வரையற்ற உண்ணாவிரதம் துவங்கியிருப்பதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி என்னை சந்தித்து பேசுகையில் மன்னித்துவிட்டதாக கூறினார். உயர்நீதிமன்றமும் என்னுடைய விடுதலை குறித்து கமிட்டி ஒன்றை அமைக்கச் சொல்லி அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.


அரசு கமிட்டி அமைக்க காலம் கடத்தி வருகிறது. சிறைத் தண்டனை முடிந்தும் எனக்கு அரசு அநீதி இழைத்து வருகிறது. எனவேதான் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளேன்" என நளினி கூறியுள்ளார்.

மூலம்[தொகு]