ரேபீஸ் நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 8, 2009

வெறிநாய்க்கடியின் மூலம் மனிதர்களை தாக்கும் ரேபீசு நோய்க்கு அமெரிக்காவின் பிலடெல்பியாவின் தாமஸ் ஜாபர்சன் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

வெறிநாய்க்கடியின் மூலம் மனிதர்களை தாக்கும் ரேபீசு நோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 55,000க்கும் அதிகமானவர்கள் இறக்கிறார்கள். இந்தியா இலங்கை போன்ற வளரும் நாடுகளிலேயே இத்தகைய உயிர்பலிகள் அதிகம் நடக்கின்றன.

ரேபீஸ் நோய் நாய்களை தாக்காமல் இருக்க வேண்டுமானால், அவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசிகள் போடப்படவேண்டும்.

இத்தகைய தடுப்பூசிகள் அமெரிக்காவில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறையும் போடப்படுகிறது. ஆனால் பெல்வேறு காரணங்களால் இந்த தடுப்பூசிகள் முறையாக போடப்படாததால், ரேபீஸ் நோய் நாய்கள் மூலம் தொடர்ந்து மனிதர்களுக்கு பரவுவதோடு, ஆயிரக்கணக்கானவர்களை கொல்லவும் செய்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிலடெல்பியாவின் தாமஸ் ஜேபர்சன் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த புதிய தடுப்பூசியை, நாய்கள் உள்ளிட்ட ரேபீஸ் நோயை மனிதர்களுக்கு பரப்பும் விலங்குகளுக்கு ஒரே ஒரு முறை போட்டால் அந்த விலங்குகளின் வாழ்நாள் முழுவதும் அந்த ரேபீஸ் நோய் அவற்றுக்கு தாக்காமல் இருக்கும் என்பதால் அவை மூலம் இந்த ரேபீஸ் மனிதர்களுக்கு பரவாமலும் தடுக்க முடியும் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மூலம்[தொகு]

  • பிபிசி தமிழோசை