ரோமா மக்களுக்கு எதிராக பல்கேரியர்கள் ஆர்ப்பாட்டம்
- 2 அக்டோபர் 2011: ரோமா மக்களுக்கு எதிராக பல்கேரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஞாயிறு, அக்டோபர் 2, 2011
ரோமா மக்களுக்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஏறத்தாழ 2,000 பேர் பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
பல்கேரியாவின் ஜிப்சிகள் என அழைக்கப்படும் ரோமா மக்கள் கூட்டுக் குற்றத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்ற வாரம் ரோமா குழுவினரின் தலைவர் ஒருவரின் உறவினரின் வாகனம் ஒன்றில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "துவேச உணர்வை உடனடியாக நிறுத்த வேண்டும்," என அரசுத்தலைவர் கியோர்கி பர்வானொவ் கூறியுள்ளார்.
"அண்டி வாழும் மக்கள், குற்றக்குழுக்கள் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்," என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அக்டோபர் 23 இல் அரசுத்தலைவருக்கான தேர்தல்கள் இடம்பெற இருக்கும் வேளையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
வலதுசாரி வேட்பாளர் வோலென் சீதரொவ் தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றுகையில், "மரணதண்டனை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும், ரோமாமக்களின் சேரிகள் அகற்றப்பட வேண்டும்," போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர் "ஜிப்சி நாடொன்றில் நான் வாழ விரும்பவில்லை," என்ற பதாகையைத் தாங்கியிருந்தார். பல்கேரியாவின் 7.4 மில்லியன் மக்கள் தொகையில் ரோமா மக்கள் ஏறத்தாழ 5% ஆகும்.
மூலம்
[தொகு]- Bulgarian rally links Roma to organised crime, பிபிசி, அக்டோபர் 1, 2011
- Anti-Roma Demonstrations Spread Across Bulgaria, நியூயோர்க் டைம்ஸ், செப்டம்பர் 27, 2011