வனுவாட்டுப் பிரதமர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்டார்
- 21 ஆகத்து 2011: தெற்கு பசிபிக்கில் வனுவாட்டுக்கு அருகே பெரும் நிலநடுக்கம்
- 2 திசம்பர் 2010: வனுவாட்டுப் பிரதமர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்டார்
வியாழன், திசம்பர் 2, 2010
பசிபிக் நாடான வனுவாட்டுவின் பிரதமர் எடுவார்ட் நட்டாப்பி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். வாக்கெடுப்பு நடக்கும் போது பிரதமர் நாட்டில் இருக்கவில்லை. பிரதிப் பிரதமர் சாட்டோ கில்மான் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
மெக்சிக்கோவில் இடம்பெற்றுவரும் சுற்றுச்சூழல் மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நட்டாப்பி சென்றிருந்த வேளையிலேயே இவ்வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
தனக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு முயன்ற ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நட்டாப்பி வெளியேற்றுவதற்கு முன்னதாகத் தீர்மானித்திருந்தார். அத்துடன் மெலனீசியக் கூட்டுநாடுகளின் தலைமைத்துவத்தை பிஜியின் இராணுவத் தலைவர் கொமடோர் பிராங்க் பைனிமராமா பெறுவதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கு நட்டாப்பி எடுத்த முயற்சிகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் அதிருப்தி கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டில் நட்டாப்பி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். வனுவாட்டு பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இத்தீவுக்கூட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
மூலம்
[தொகு]- Vanuatu PM Natapei ousted in no confidence vote, பிபிசி, டிசம்பர் 2, 2010