வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியும், யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சியும் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து
இலங்கை வரைபடத்தில் வவுனியா

சனி, ஆகத்து 8, 2009, இலங்கை:


இன்று நடைபெற்ற யாழ் மாநகரசபை, மற்றும் ஊவா மாகாணசபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும், வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வவுனியா நகரசபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி 4279 (34.81%) வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட மொத்தவாக்குகளின் எண்ணிக்கை 4136 (33.65%). இதன்படி அது 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3045 (24.77%) வாக்குகளை பெற்று, 2 ஆசனங்களைப் பெற்றது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 587 (4.78%) வாக்குகளை பெற்று, 1 ஆசனத்தைப் பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி 228 (1.85%) வாக்குகளைப் பெற்று ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை.

மொத்தம் 24,626 வாக்காளர்கள் உள்ள வவுனியா நகரசபை வட்டாரத்தில், 12,850 பேர் (52%) மட்டுமே வாக்களித்திருந்தனர்.

இலங்கை வரைபடத்தில் யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாநகரசபை

யாழ்ப்பாண மாநரகசபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இறுதி முடிவுகள் வருமாறு:

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 10602 (50.67%) வாக்குகளை பெற்று 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி 8008 (38.28%) வாக்குகளைப் பெற்று 8 இடங்களைப் பெற்றது.

சுயேட்சைக் குழு - ஒன்று 1175 (5.62%) வாக்குகளை பெற்று 1 இடத்தைப் பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி 1007 (4.81%) வாக்குகளை பெற்று ஒரு இடத்தைப் பெற்றது.

மொத்தம் 100,417 வாக்காளர்கள் உள்ள யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரத்தில், 22,280 பேர் (20%) மட்டுமே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாணம்
ஊவா மாகாணசபை

ஊவா மாகாணசபை தேர்தலின் இறுதி முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 418,906 வாக்குகளை பெற்று 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 129,144 வாக்குகளை பெற்று 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஜே.வி.பி பெற்ற 14,639 வாக்குகளைப் பெற்று இடத்தைப் பெற்றது.

மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகளுடன் 1 இடத்தைப் பெற்றுள்ளது.


மூலம்[தொகு]