உள்ளடக்கத்துக்குச் செல்

வவுனியா புனர்வாழ்வு முகாமில் முன்னாள் போராளி தற்கொலை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 22, 2011

கடந்த பல மாதங்களாக முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாமில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் நேற்றுத் திங்கட்கிழமை காலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டம், பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசீர்வாதம் நியூஸ்டன் என்ற இவ்விளைஞர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


வவுனியா பம்பைமடு தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத் தொகுதியில் இயங்கி வரும் இந்தப் பயிற்சி முகாமில் 2009 ஆம் ஆண்டு மே இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் பிலி இளைஞர்கள் பலர் தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர்.


விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு மாதம் வரை இருந்து, பின்னர் சுகவீனம் காரணமாக புலிகளினால் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இந்த இளைஞர், ஓமந்தை முகாமில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.


ஆறு சகோதரர்களுடன் பிறந்த இவரது குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இவரது இரண்டு சகோதரிகள் தமது கணவன்மாரை இழந்திருந்தனர். இவர் புனர்வாழ்வு பெற்று வந்த முகாமில், 38 அடி ஆழமுடைய பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த கிணறு ஒன்றிலேயே இவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


மூலம்

[தொகு]