விக்கிப்பீடியா தனது 10வது பிறந்தநாளைக் கொண்டாடியது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, சனவரி 16, 2011

இந்தியாவில் முக்கிய நகரங்களில் விக்கிப்பீடியாவின் 10ம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாடப்பட்டது

உலகின் பிரபல, இணையத்தள கலைக்களஞ்சியமாக விளங்கும் 'விக்கிப்பீடியா' தனது 10 வது பிறந்த தினத்தை நேற்று வெகுவிமர்சையாக கொண்டாடியது.


உலகின் பல்வேறு பாகங்களிலும் சுமார் 289 வைபவங்கள் விக்கிப்பீடியாவின் 10 வது ஆண்டுக் கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் விக்கிப்பீடியா புதிய பரிமாணத்துடன் காலடி எடுத்து வைத்துள்ளதால் பெங்களூர், புதுதில்லி, சென்னை போன்ற நகரங்களில் சிறப்பாக இவ்வைபவம் கொண்டாடப்படுகிறது. நேற்று சென்னையில் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆங்கிலவிக்கிப்பீடியா, தமிழ், மற்றும் மலையாள விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டனர்.


சென்னையில் நடந்த விழாவில் விக்கிப்பீடியா புத்தகவெளியீடு
சென்னை விழாவில் கேக் வெட்டுதல்

தமிழ் விக்கியர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்கிற புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது. அவ்விழாவில் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் திரு. பத்ரி சேசாத்திரி நூலை வெளியிட்டு சிறப்பித்தார். முதல் பிரதியை இதழியலாளர் சுகதேவ் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை டாக்டர்.கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


இவ்விழாவின் முத்தாய்ப்பாய் விக்கி நிறுவனர் ஜிம்மி வேல்சு தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பின்னர் ஸ்கைப் வீடியோ அரட்டை மூலம் வாழ்த்து தெரிவித்தார்.


2001 சனவரி 15-16ம் திகதிகளில் விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், 'ஹெலோ வோர்ல்ட்' எனும் பந்தியை விக்கிபீடியாவில் எழுதினார். அன்றிலிருந்து யாரும் இவ் இணையத்தில் தமக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம், எனும் கட்டற்ற சுதந்திரத்தை முதன் முதலில் வழங்கிய இணையத்தளம் விக்கிப்பீடியாவாகத்தான் பார்க்கப்படுகிறது.


இந்தத் தனித்தன்மை ஓர் ஆண்டிற்குள் விக்கிப்பீடியாவின் புகழை பன்மடங்கு உயர்த்தியது. இன்று ஆங்கில மொழியில் 3 மில்லியன் கட்டுரைகளும், சுமார் 250 மொழிகளில் மொத்தம் 9.25 மில்லியன் கட்டுரைகளையும் இது கொண்டுள்ளது. இன்று 400 மில்லியன் வாசகர்களை கொண்டுள்ள விக்கிப்பீடியா அலெக்சா தரவரிசைப்படி உலக இணையத்தளங்கள் வரிசையில் 8வது இடத்தை தக்கவைத்துள்ளது. மாதந்தோறும் 410 மில்லியன் வாசகர்கள் இத்தளத்திற்கு வருகை தருகின்றனர்.


10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இணையத்தளமாகவே இல்லாது, முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ள விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த வாசகர்களே முனைய வேண்டும் எனவும், விக்கிமீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


விக்கிபீடியாவின் தமிழ் பதிப்பு, தமிழ் விக்கிபீடியா செப்டெம்பர் 2003 ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 27,000 இற்கும் அதிகமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.


மூலம்[தொகு]