உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப் புலிகளின் தலைவர் செ. பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டதாக இலங்கை அறிவித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 7, 2009, கொழும்பு, இலங்கை:


விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி. என்றழைக்கப்படும்செல்வராசா பத்மநாதன் தாய்லாந்து பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இவர் இப்போது கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என தேசியப் பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதிலும் நிதி திரட்டுவதிலும் இவர் ஈடுபட்டு வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இக்கைது குறித்து புதினம் இணையத்தளம், செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்தினம் புத்ன்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் நெருங்கிய வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:


"நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார். பிற்பகல் அளவில் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார். பின்னர், பிற்பகல் 2.00 மணியளவில், தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.


கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி - செல்வராஜா பத்மநாதன் மலேசிய புலனாய்வுத்துறை அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகவே குறிப்புகள் உணர்த்துகின்றன." இவ்வாறு புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இதற்கிடையில், தாய்லாந்துப் பிரதமர் அபிசித் வெச்சஜீவா பத்மநாதனின் கைது பற்றிய செய்தி குறித்து தமக்கு முழுமையான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும்படி நாட்டின் பாதுகாப்பு அமைச்சுக்க்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இக்கைது பற்றிய தகவல் தமக்கு வியாழன் இரவே தமக்குத் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தின் தலைமைக் காவல்துறை அதிகாரி தீரதேஜ் ரொட்ஃபோதொங், பத்மநாதன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாகவும், தாய்லாதில் அல்லவென்றும் தெரிவித்தார்.


மூலம்

[தொகு]