வெள்ளைக் கொடி விவகாரம்: சரத் பொன்சேகா சாட்சியம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 26, 2011

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளைச் சுட்டுக் கொல்லுமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டதாகத் தான் கேள்விப்பட்டிருந்ததாக முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


சரத் பொன்சேகா

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை போரின் இறுதிக் கட்டம் வரை இராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாகவே நான் கேள்விப்பட்டிருந்தேன். அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் இடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நோ்காணலின் போது அவர் எந்தவொரு வினாவையும் தொடுக்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட முறையில் உரையாடும் போதே நான் மேற்கண்ட விடயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன், என்றார் பொன்சேகா.


விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. இராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவுமில்லை என்றும் சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது மேலும் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், இலங்கை சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நியாயமானது. அவர்கள் விடயத்தில் அரசாங்கம் தனது கடமைகளை சரிவர செய்யவில்லை என்று பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் கலந்துகொள்வதற்காக பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டே செல்லும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மூலம்[தொகு]