வெள்ளை மாளிகையில் ஒபாமா அளித்த விருந்தில் சமோசா

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 28, 2009 வாசிங்டன், ஐக்கிய அமெரிக்கா:


அமெரிக்காவுக்கான வெளிநாட்டு தூதர்களுக்கு அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் விருந்தளித்தனர்.


அந்த விருந்தில் விதவிதமான உணவு வகைகள் இருந்தாலும் இந்தியாவின் பிரபல உணவான "சமோசா' முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.


இந்தியாவில் சமோசா சைவ வகை உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளில் சமோசா அசைவ வகை உணவாகக் கருதப்படுகிறது, காரணம், அங்கு கோழி இறைச்சி கலந்துதான் சமோசா தயாரிக்கப்படுகிறது.


ஒபாமாவும், அவரது மனைவியும் அளித்த விருந்தில் இந்திய தூதரும் கலந்து கொண்டார். விருந்தில் இடம்பிடித்திருந்த "சிக்கன் சமோசா' தூதரை மட்டுமல்லாது அனைத்து வெளிநாட்டு தூதர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.


அவர்கள் பிற உணவு வகைகளைவிட சிக்கன் சமோசாவை விரும்பி சாப்பிட்டார்கள். இதைப் பார்த்து ஒபாமாவும், மிசேலும் மகிழ்ச்சி அடைந்தனர்.


விருந்து முடிந்த பின்னர் தூதர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, ராசதந்திரம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. 21-ம் நூற்றாண்டில் நாம் ஏராளமான பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்நோக்கியுள்ளோம். இவை அனைத்தையும் நாம் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளாதவரை அதற்குத் தீர்வு காண்பதென்பது சாத்தியமல்ல என்றார்.


பிற நாடுகளுடனான அமெரிக்காவின் ராசதந்திர உறவில் மாற்றத்தைக் கொண்டுவந்து புதிய சகாப்தம் படைக்க வேண்டும் என்ற உறுதியுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளேன் என்றும் ஒபாமா கூறினார்.


உலக அமைதிக்காக...:அமெரிக்காவின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல் நாம் அனைவரும் உலக அமைதிக்காகவும், செழுமைக்காகவும் ஒருங்கிணைந்து பாடுபடுவது அவசியம் என்று மிசேல் ஒபாமா தெரிவித்தார்.

மூலம்[தொகு]