உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டெர்லைட் தீர்ப்பு 2020

விக்கிசெய்தி இலிருந்து

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது...! உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பு!!

துாத்துக்குடியில், 'வேதாந்தா குரூப்' நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை கட்டமைத்து நடத்தி வந்தது. தாமிர உருக்காலையான இதற்கு 1994ல் 'சிப்காட்' நிலம் ஒதுக்கி உத்தரவிட்டது. 1995ல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 1997 ஜனவரியில் ஸ்டெர்லைட் உற்பத்தியை துவங்கியது.

இந்த ஆலையால், சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாகவும், பொது மக்கள் உடல் நிலை பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும், 2018ல் மக்கள் போராட துவங்கினர்.

கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த பொது மக்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாயினர். இதையடுத்து, ஆலையை மூடி, 'சீல்' வைக்க, 2018 மே மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு தூத்துக்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அரசு எடுத்த முடிவு நியாயமானது. அபாயகரமான கழிவு குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்துக்கு, ஆலை நிர்வாகம் எடுத்துச் செல்லாதது, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலானது என்பது, உண்மை தான். கழிவு மேலாண்மைக்கு உரிய வசதிகளை, ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. ஆலையை முறையாக கண்காணிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறி விட்டது.

ஆலையை மூடி விட்டால், தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது; பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்ற, வாதத்தை ஏற்க முடியாது. பொருளாதார பாதிப்பை விட, சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியமானது. அரசியல் காரணங்களுக்காக, ஆலையை மூடியதாக, மனுதாரர் தரப்பில் கூறினால், 20 ஆண்டுகளுக்கு முன், ஆலையை துவங்க அனுமதி வழங்கியதும், அரசியல் காரணங்களுக்காகத் தான் என, கூற வேண்டியது வரும்.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பத்தை நிராகரித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு செல்லும். ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு, மின் இணைப்பை துண்டிக்க பிறப்பித்த உத்தரவு செல்லும். இந்த உத்தரவுகளை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மூலம்

[தொகு]
  • [1] ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது...! உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பு!!| TamilNews 24x7.com Wednesday, Aug 19,2020 ,07:23:16am
"https://ta.wikinews.org/wiki/ஸ்டெர்லைட்_தீர்ப்பு_2020" இலிருந்து மீள்விக்கப்பட்டது