1940களில் இடம்பெற்ற இந்தோனேசியப் படுகொலைகளுக்கு நெதர்லாந்து மன்னிப்புக் கேட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 12, 2013

முன்னாள் டச்சுக் குடியேற்ற நாடான இந்தோனேசியாவில் தமது படையினரால் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நெதர்லாந்து அரசு பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.


இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணம்

1945 முதல் 1949 இல் இந்தோனேசியா விடுதலை பெறும் வரையில் டச்சுப் படையினர் மேற்கொண்ட குற்றச்செயல்களுக்கு இந்தோனேசியாவுக்கான டச்சுத் தூதர் ஜீர்டு டி சுவான் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டார். அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்களுக்கு நெதர்லாந்து அரசு ஏற்கனவே மன்னிப்புக் கேட்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்கியிருந்தாலும், இப்போது முதன்முதலாகப் பொது மன்னிப்புக் கோரியுள்ளது.


அன்றைய படுகொலைகள் திட்டமிட்ட முறையில் மிகக் கடுமையான முறையில் நிகழ்த்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


1945 ஆம் ஆண்டில் இந்தோனேசியர்களுக்கும் டச்சு இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் ஆரம்பமாயின. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணமே மிகவும் பாதிப்படைந்தது. சனவரி 1947 இல், உள்ளூர் அரசி அலுவலகம் ஒன்றின் முன்னால் 200 இற்கும் அதிகமான இந்தோனேசிய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு பாலொங்சாரி என்ற கிராமத்தில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டனர். நெதர்லாந்தில் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு 20,000 யூரோக்கள் இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனாலும், இப்படுகொலைகளுக்கு டச்சுப் படையினர் எவரும் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படவில்லை..


தற்போதைய இந்தோனேசியாவின் பெரும் பகுதி 19 ஆம் நூற்றாண்டு முதல் இரண்டாம் உலகப்போர் வரையில் டச்சுக்களின் பிடியில் இருந்து வந்தது. பின்னர் சப்பானியப் படையினர் டச்சுக்களைத் துரத்தினர். டச்சுக்கள் மீண்டும் இழந்த பகுதிகளை யப்பானியரிடம் இருந்து மீட்க முயன்ற போது இந்தோனேசியரிடம் இருந்து பெரும் எதிர்ப்பைச் சந்தித்தனர். இறுதியில் 1949 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் விடுதலையை நெதர்லாந்து ஏற்றுக் கொண்டது.


மூலம்[தொகு]