1981 இனப்படுகொலைகளுக்கு எல் சால்வடோர் தலைவர் மன்னிப்புக் கோரினார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 18, 2012

எல் சால்வடோரில் 1981 ஆம் ஆண்டில் ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு அந்நாட்டின் அரசுத் தலைவர் மொரீசியோ ஃபியூனெசு பொது மன்னிப்புக் கோரினார். இப்படுகொலைகள் "இலத்தீன் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடிய படுகொலைகள்," என அவர் வர்ணித்துள்ளார்.


எல் சால்வடோர் தலைவர் மொரீசியோ ஃபியூனெசு

எல் மொசோட்டே நகரில் இடதுசாரித் தீவிரவாதிகளை ஆதரித்தார்கள் எனக் குற்றஞ்சாட்டி 1981 டிசம்பர் 11 முதல் 13 வரையான நாட்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோரை இராணுவத்தினர் படுகொலை செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் 75,000 பேர் உயிரிழந்தனர்.


எல் சால்வடோரில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு விழாக் கொண்டாட்டத்தின் போதே திரு. ஃபியூனெசு இந்த உருக்கமான உரையை நிகழ்த்தியுள்ளார். எல் மொசோட்டே நகரம் தலைநகர் சான் சால்வடோரில் இருந்து 200கிமீ தூரத்தில் ஒந்துராசின் எல்லையில் அமைந்துள்ளது.


"இப்படுகொலைகளுக்காக, அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நாம் மன்னிப்புக் கேட்கிறோம்," என கடந்த திங்கட்கிழமை நடந்த விழாவில் தெரிவித்தார். "மூன்று நாட்களில் மிகப் பெரிய அழிவு இடம்பெற்றது," எனக் கண்ணீர் மல்க அவர் கூறினார்.


இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோர் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. 1992 இல் இடம்பெற்ற அமைதி உடன்பாட்டில் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.


தீவிர இடதுசாரியான மொரீசியோ ஃபியூனெசு 2009 ஆம் ஆண்டில் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1980களில் அமெரிக்க சார்பு அரசை எதிர்த்துப் போரிட்ட ஃபாரபுண்டோ பார்ட்டி தேசிய விடுதலை முன்னணி (FMLN) என்ற மார்க்சியப் போராளிக் குழுவைச் சேர்ந்தவர்.


மூலம்[தொகு]