2003 மும்பை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத் தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 6, 2009, மும்பாய், இந்தியா:


மும்பையில் ஆகஸ்ட் 2003ஆம் ஆண்டு நடந்த இரட்டை கார்க் குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு மும்பை சிறப்பு பொடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.


2003ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா என்ற புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு அருகிலும் நகைகள் விற்கும் சந்தை ஒன்றிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை மும்பை சிறப்பு பொடா நீதிமன்றம் விசாரித்து வந்தது.


பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தக் குண்டு வெடிப்புகளை திட்டமிட்டதாக ஒரு தம்பதியர் உட்பட மூவர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு கொடிய தாக்குதல்களை நடத்தியதும் இதே லஸ்கர்- இ-தொய்பா இயக்கம் தான் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது.


இன்று இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முகம்மது ஹனீப் சயீத், அவரது மனைவி பஹீமிதா, மகள் அஷ்ரத் சபியுக் அன்சாரி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


இந்தத் தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், "லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு இது மரண அடியாகும்" என்றார். ஒரு தீவிரவாத செயலில் கணவர், மனைவி, மகள் என ஒரு குடும்பமே ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.


இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை , 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் குண்டு வைக்கப்பட்டிருந்த டாக்சியின் டிரைவராவார். இந்த வழக்கை மொத்தாம் பங்க்ளே, எஸ்.எஸ்.ஜோஷி ஆகிய இரு நீதிபதிகள் விசாரித்தனர். கடைசியாக நீதிபதி புரானிக் விசாரித்து, தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.


இன்று தண்டனை வழங்கப்பட்ட மூவர் மீதும் முன்னர் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் ஒன்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் இப்போது ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. மரண தண்டனையை எதிர்த்து மேன் முறையீடு செய்யவுள்ளதாக தண்டனையளிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இதே வேளையில், இந்தியாவின் மும்பை நகரில் 2008 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தேடப்படும் 13 பேரைக் கண்டுபிடித்துத் தருமாறு அனைத்துலக அவசர உசார் அறிக்கையொன்றை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளதாக அனைத்துலக பொலிஸ் அமைப்பான இன்டர்போல் அறிவித்துள்ளது.


மூலம்[தொகு]