20 ஆண்டுகளுக்குப் பின்னர் பர்மாவில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 8, 2010

20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக பர்மாவில் நேற்று பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் எவரும் பர்மாவில் இருந்து தேர்தல் செய்திகளை அளிக்க அனுமதிக்கப்படவில்லை.


மேற்குலக நாடுகள் இத்தேர்தலை சுதந்திரமான தேர்தல் என்பதை ஏற்க மறுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமைத் தேர்தல் "பன்னாட்டுத் தரத்தில்" அமையவில்லை என ஐக்கிய அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் இத்தேர்தலைக் குறி கூறியுள்ளன.


மக்களாட்சிக்கான தேசிய முன்னணி என்ற முக்கிய எதிர்க்கட்சி தேர்தல்களில் போட்டியிடாத நிலையில், இராணுவத்துக்குச் சாதகமான சிறிய கட்சிகள் வெற்றி பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூ சி தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய முன்னணி, மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுள்ளது.


பல வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு மிகவும் சொற்பமாகவே இருந்ததாக பர்மாவின் பெரிய நகரான ரங்கூனில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரங்கூனுக்கு அருகே தளமமைத்துள்ள படைகளின் ஒரு படைவீரர் பிபிசியுடன் பேசுகையில், பத்து இராணுவ ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த படையினர் தேர்தலில் வாக்களிக்க மறுத்துள்ளதாக கூறினார்.


இதற்கிடையில், தாய்லாது எல்லையில் இடம்பெற்ற மோதல்கள் இத்தேர்தல்கள் இனவாரியாக தீவிரவாதத்தை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


மயாவதி என்ற நகரில் அரசுப் படைகளுடன் கேரன் சனநாயக பௌத்த இராணுவம் என்ற என்ற போராளிக்குழு மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்து எல்லையில் கிரனைட்டு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. 11 பேர் காயமடைந்தனர். கிழக்கு பர்மாவில் சுயாட்சி கோரி இவர்கள் போராடி வருகின்றனர்.


சட்டவிரோதமாக எல்லையினூடாக உள்ளே நுழைய முயன்ற சப்பானிய செய்தியாளர் ஒருவர் மயாவதி என்ற நகரில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுச் செய்தியாளர்கள் எவரும் பர்மாவினுள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.


1990 ஆம் ஆண்டில் கடைசியாகத் தேர்தல் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆங் சான் சூ கீயின் தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய முன்னணி அமோகமான வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனாலும் இராணுவ ஆட்சியாளர்கள் அக்கட்சியை ஆட்சியில் அமர்த்த மறுத்து விட்டதும் அல்லாமல் கட்சியையும் கலைத்தனர்.


மூலம்[தொகு]