உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகொப்டர் விமானம் மோதல்

விக்கிசெய்தி இலிருந்து
மான்ஹட்டன் பகுதியில் அட்சன் ஆறு

ஞாயிறு, ஆகத்து 9, 2009, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா:


அமெரிக்காவில் நியூயோர்க்கில் சிறிய ரக விமானமொன்றும் ஹெலிகொப்டர் ஒன்றும் நடுவானில் மோதி, அட்சன் ஆற்றில் வீழ்ந்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். நியூஜெர்சியின் ஹொபோகென் நகருக்கும் மன்ஹற்றன் நகருக்கும் இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


நியூயோர்க்கில் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் ஒரு ஹெலிகொப்டரில் பயணம் செய்தனர். அதே நேரத்தில் ஒரு குட்டி விமானத்தில் 3 பேரும், ஒரு குழந்தையும் பயணம் செய்தனர். இவை இரண்டும் நியூயோர்க் நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது குட்டி விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விமானம், ஹெலிகொப்டரின் பின்பகுதியில் மோதியது.


எனவே, நிலை தடுமாறிய ஹெலிகொப்டரும், விமானமும் நியூயோர்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் விழுந்து மூழ்கியது. இதில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த இத்தாலிய சுற்றுலா பயணிகள் 5 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை, விமானி மற்றும் 2 பயணிகள் உள்ளிட்ட 4 பேரும் ஆக மொத்தம் 9 பேர் பலியானார்கள்.


தகவல் அறிந்ததும் அதிகாரிகளும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். இவ்விபத்து தொடர்பாக நியூயோர்க் மேயர் மைக்கேல் புளும்பெர்க் தெரிவிக்கையில்;

இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எவராவது உயிருடன் இருப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை. சுழியோடி உடல்களைத் தேடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவசர நடவடிக்கைகள் மீட்புப் பணிகளாக மாற்றப்பட்டுள்ளன. காரணம் இதன் முடிவுகள் சந்தோசகரமானதாக அமையப்போவதில்லை. ஹெலிகொப்டரின் பின்பக்கத்திலேயே விமானம் வந்து மோதியுள்ளது. இந்நிலையில் இவ் விபத்து தொடர்பான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விமானத்தின் சிறகொன்று உடைந்து வீழ்ந்ததை சிலர் கண்டுள்ளனர். ஹெலிகொப்டரின் சில உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, 30 அடி ஆழத்திற்கு மேலுள்ள பகுதிகளை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளதெனத் தெரிவித்தார்.


கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஏர்வேஸ் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி ஹட்சன் ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பயணம் செய்த 150 பேரும் உயிர் தப்பினார்கள். அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் நடுவானில் 70 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 140 விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.


மூலம்

[தொகு]