உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியர்கள் இரண்டு பழமையான மரபணுக் குழுக்களைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டம்பர் 25, 2009, இந்தியா:

மாந்தர்களின் இடப்பெயர்வு, எண்கள் ஆண்டுகளின் ஆயிரங்களில் தரப்பட்டுள்ளது. நிலப்பகுதிகளின் இணைப்ப்புகளைத் தெளிவாகக் காட்டுமுகமாக உலகப்படம் காட்டப்பட்டுள்ளது. மேற்புறம் இருப்பது ஆப்பிரிக்கா, வலப்புறம் இருப்பது தென்னமெரிக்கா. இடப்புறம் நடுவே இருப்பது இந்தியா


இந்தியாவில் பரவலாகத் திரட்டி நடத்தப்பட்ட ஒரு மரபணு ஆய்வில், இந்தியர்கள் அனைவரும் இரண்டு பழமையான மரபணுக் குழுக்களையே பெரும்பாலும் தங்களின் பூர்வீகமாகக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இவ்வாய்வில் தமிழ்நாட்டில் இருந்து மரபணுக்கள் திரட்டிய செய்திகள் இல்லை, ஆனால் தென்னாட்டில் இருந்தும் உள்ளது. மரபணு நோக்கில் தென்னிந்தியர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.


இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஐதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஆர்வர்டு மருத்துவப் பள்ளி, ஆர்வர்டு பொது தூய்நல (சுகாதார)க் கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்ஃசு தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.


இந்திய மக்களுக்குக்கு மரபணு வழியாக வரும் பாரம்பரிய நோய்கள் அதிகம் வருகின்ற ஆபத்து உள்ளது என்றும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் எச்சரித்துள்ளனர்.


இது குறித்து ஐதராபாத் மையத்தின் மூத்த அறிவியலாளரான குமாரசாமி தங்கராசன் பிபிசிக்கு கூறுகையில், 13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் மரபணுத்தொகுமத்திலிருந்து (ஜீனோம்களிலிருந்து) 5 இலட்சம் மரபணுக் குறியீடுகளை ஆய்வு செய்தோம். ஆய்வுக்குப் பொறுக்கப்பட்ட பெரும்பாலோர் இந்தியாவின் முதன்மையான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


பழங்குடியினர், மற்றும் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.


இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் (ANI) என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் (ASI) என்றும் பெயரிட்ட்டு அழைக்கிறார்கள். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம், என்று கருத்து தெரிவிக்கின்றது இவ்வாய்வு.


இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் நோக்கில் 39 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள்.


ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் நோக்கில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள்.


அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான ஓன்கே என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து வேறாகக் காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிதளவு இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.


இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே குழுவைச் சேர்ந்த மூதாதையரிடம் இருந்து தொன்முது காலத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.


அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் முதல்மனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.

1875 ஆம் ஆண்டில் இரண்டு அந்தமான் தீவு ஆண்கள்

அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளனர்.


பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும் (அகமணம் புரிவதால்), தமக்கே உரிய பண்பாட்டுக் கூறுகள், பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் பண்பாட்டு நோக்கில் தனித்தன்மை கொண்டு உள்ளனர்.


இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாக பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பிரிவினைதான் பண்பாட்டுக் கூறுகளாக, வெளிப்பாடுகளாக தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.


பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் (அகமணம் செய்துகொள்வதால்) ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் கோணத்திலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை எடுத்துரைத்து இருக்கிறார்கள்.


கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு இந்தியர்கள் மரபியல் அடிப்படையிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் அறிவியலாளர்களிடையே முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது.

அடிச்சான்று

[தொகு]