ஏரிஸ் I-X விண்கப்பலை நாசா வெற்றிகரமாகச் சோதித்தது
சனி, அக்டோபர் 31, 2009
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான ஏரிஸ் I-X என்ற விண்கப்பலின் (ராக்கெட்டின்) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இந்த விண்கப்பல் தற்போது விண்ணுக்குச் செலுத்தப்பட்டுவரும் விண்ணோடங்களுக்குப் பதிலாக அடுத்த பத்தாண்டுகளில் மனிதர்களை விண்ணுக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிலவுக்கு செல்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், உலகிலேயே மிக உயரமான விண்கப்பல் 450 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் 100 மீட்டர் உயரம் உடையது. அதிர்வுகள், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கணிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் இதில் உள்ளன.
இந்த விண்கப்பலின் பரிசோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் புளோரிடா மாகாணத்தில் உள்ள, கென்னடி ஏவுதளத்தில் வியாழன் அதிகாலை மேற்கொள்ளப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால், ராக்கெட் சோதனை 3 மணி நேரம் தாமதமானது. பின்னர், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை ஓட்டம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்த இரு நிமிட நேரத்தில் இது கிட்டத்தட்ட 40 கிமீ உயரத்துக்கு வானில் சென்றது. ராக்கெட் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களில் பாராசூட் மூலம் அத்திலாந்திக் கடலில் இறக்கப்பட்டது. பின்னர், திட்டமிட்டபடி கப்பல் மூலம் மீட்கப்பட்டது. ஆனாலும், இது கடலில் இறங்கும் போது பாரசூட்டில் ஏற்பட்ட ஒரு கோளாறின் காரணமாக விண்கப்பலின் பூஸ்டர் பழுதடைந்துள்ளதாக நாசா வானியலாளர்கள் தெரிவித்தனர்.
மூலம்
[தொகு]- "NASA's Ares I-X Rocket Completes Successful Flight Test". நாசா, அக்டோபர் 28, 2009
- "Nasa rocket launches successfully". பிபிசி, அக்டோபர் 28, 2009
- "Rocket booster damaged on return". பிபிசி, அக்டோபர் 30, 2009
- மிக உயரமான ராக்கெட் சோதனை ஓட்டம் வெற்றி