உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகோளுக்குச் சென்ற சப்பானிய விண்கலம் பாதுகாப்பாகத் திரும்பியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 14, 2010


சிறுகோள் ஒன்றில் இருந்து முதற்தடவையாக மாதிரிகளை எடுத்துக்கொண்டு வந்ததாகக் கருதப்படும் விண்கலன் ஒன்று பூமிக்குத் திரும்பியது.


ஹயபுசா விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த நாசா வீடியோக் கருவி எடுத்த காணொளி.முழுமையான செறிவு கூடிய காணொளியை இங்கு பார்க்கலாம் (தகவல்கள்)
தாய்க்கலத்தில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்ட கொள்கலன் பிரிகிறது

சப்பானின் ஹயபுசா என்ற இந்த விண்கலன் நேற்று கிரீனிச் நேரப்படி 1350 மணிக்கு புவியின் வளிமண்டலத்தினுள் நுழைந்தது. தெற்கு ஆத்திரேலியாவின் மீது மிகவும் பிரகாசமான தீக்குழம்பு தென்பட்டது.


மாதிரிகள் சேகரிக்கப்பட்ட கலம் இணைக்கப்பட்ட முதன்மைக் கலம் 200 கிமீ உயரத்தில் 12கிமீ/செக் வேகத்தில் வளிமண்டலத்துள் பிரவேசித்தது. முதன்மைக் கலம் 3,000C வெப்பத்தைத் தாங்காமல் தீப்பிடித்து அழிந்து விட்டது. மாதிரிகளைச் சுமந்து வந்த கலம் வெப்பக்காப்பிடப்பட்டிருந்ததால் தொடர்ந்து பூமியை நோக்கி வீழ்ந்தது. 10 கிமீ உயரத்தில் அதனுடன் பொருத்தப்பட்டிருந்த பாரசூட் விரிந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.


தெற்கு ஆஸ்திரேலியாவின் வூமரா தடை வலயத்தினுள் இது தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


"தெற்கு ஆஸ்திரேலியாவின் வானில் நாம் இப்போது தான் ஒரு பிரகாசமான ஒளியைக் கண்டோம்," என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிரெவர் அயர்லாண்ட் தெரிவித்தார். இவ்விண்கலன் கொண்டுவந்த மாதிரிகளை இவரும் சோதிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஹயபுசா (Hayabusa) திட்டம் இட்டோக்காவா (Itokawa) என்ற சிறுகோளுக்கு 2003 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இவ்விண்கலம் 2007 ஆம் ஆண்டில் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகளினால் மூன்றாண்டுகளின் பின்னரே திரும்பியிருக்கின்றது.


இட்டக்கோவாவின் மாதிரிகள் இந்த விண்கலத்தில் இருக்குமா என்று சந்தேகம் கிளப்பப்படுகிறது. ஆனாலும், சப்பானிய விண்வெளித் திட்ட (Jaxa) அதிகாரிகள் இதில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.


"இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை இக்கொள்கலத்தை நாம் கைப்பற்றிவிடுவோம். அதற்குள் சிறிதளவேனும் தூசு இருக்கலாம் என நாம் திடமாக நம்புகிறோம். இது குறித்து திட்டவட்டமாக அறிய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும்," என ஜாக்சாவின் துணைப் பணிப்பாளர் யோசியூக்கி ஹசிகாவா தெரிவித்தார்.


"இதனை நாம் சிறப்பு வானூர்தி ஒன்றின் மூலம் டோக்கியோவுக்குக் கொண்டு செல்வோம்," என அவர் தெரிவித்தார்.


இக்கொள்கலனில் இருக்கக்கூடிய தூசியைக் கொண்டு சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால வரலாறு, மற்றும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய கோள்கள் பற்றியும் அறிய முடியும் என நம்பப்படுகிறது.

மூலம்

[தொகு]