சுமாத்திரா நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியது
வியாழன், அக்டோபர் 1, 2009, இந்தோனேசியா:
இந்தோனீசியத் தீவான சுமாத்திராவில் புதன்கிழமையன்று ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 467 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும் மழை காரணமாக அங்கு மீட்புப் பணிகள் மிக மெதுவாகவே இடம்பெறுகின்றன.
நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் எனவும் இந்தோனீசிய மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
படாங் நகரில் மருத்துவமனையொன்று அடங்கலாக பல கட்டடங்கள் அழிவடைந்துள்ள நிலையில் அவற்றில் சிக்கி 21 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
படாங் விமான நிலையத்தின் கூரைப்பகுதியொன்று இடிந்துவிழுந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலிருந்து நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்கள் தொலைவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. 6.8 அளவு இரண்டாவது நிலநடுக்கம் மீண்டும் படாங் நகரில் இன்று வியாழக்கிழமை 0852 மணிக்கு இடம்பெற்றது.
மூலம்
[தொகு]- "Indonesia quake deaths pass 450". பிபிசி, அக்டோபர் 1, 2009
- "Thousands feared dead in Indonesia quake". டைம்ஸ் ஆஃப் இந்தியா, அக்டோபர், 2009