தாய்லாந்தில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் விமானி உயிரிழப்பு
செவ்வாய், ஆகத்து 4, 2009, தாய்லாந்து:
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தாய்லாந்து விமானம் ஒன்று கோ சாமுய் என்ற தீவில் தரையிறங்கும் போது சறுக்கி அருகில் இருந்த கோபுரம் ஒன்றில் மோதியதில் விமானி உயிரிழந்தார். 10 பயணிகள் காயமடைந்தனர்.
பாங்கொக் ஏர்வெய்ஸ் விமானம் 70 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிராபி என்ற சுற்றுலா நகரில் இருந்து புறப்பட்டு கோ சாமுய் தீவுக்குச் சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டது. அந்நேரம் பெருமழை பெய்து கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது.
காயமடைந்தோரில் நால்வர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தனர்.
"விமானம் ஆட்களில்லாக் கோபுரத்தை முட்டியது எனவும் ஆனாலும் தீப்பற்றவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 1400 மணிக்கு (0800 GMT) இடம்பெற்றது.
கோ சாமுய் என்ற சுற்றுலாத் தீவு பாங்கொக் நகரின் தெற்கே 300 மைல்கள் (480 கிமீ) தூரத்தில் அமைந்துள்ளது.
மூலம்
[தொகு]- Pilot killed in Thai plane crash, பிபிசி
- Plane crashes on Thai resort island, அல்ஜசீரா