திசைநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது வழங்கப்பட்டது
ஞாயிறு, அக்டோபர் 4, 2009, வாசிங்டன்:
நீதி நெறியுடன் கூடிய துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர் மெக்லர் விருது முதல் முறையாக இலங்கை ஊடகவியலாளர் ஜெ. சி. திசைநாயகத்திற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திசைநாயகம் தற்போது 20 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உட்பட்டுள்ள நிலையில் அவருக்கு துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர் மெக்லர் விருது அமெரிக்காவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளது.
திசைநாயகம் சார்பில் அவரது மனைவி ரொன்னேட் தேசிய ஊடக கழகத்தில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார். பாரிசைத் தளமாகக் கொண்ட ஊடக உரிமைகள் குழுவான எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பும் உலக ஊடகமன்றமுமான இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளையினால் திசைநாயகம் இந்த விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
சிறந்த முறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களின் துணிகர செயற்பாடுகளுக்காக பீட்டர் மெக்லர் விருதினை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறார்கள். | ||
—மார்க்கசு புரொச்லி, வாஷிங்டன் போஸ்ட் |
இந்த நிறுவனம் பிரபல ஊடகவியலாளர் பீட்டர் மெக்லரால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நோக்கம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இலாபத்தைக் கருதாத வகையில் ஊடகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகும். இந்த வைபவத்தில் திசைநாயகத்தின் மனைவி ரொன்னேட் கருத்துத் தெரிவிக்கையில், "வருங்காலப் பத்திரிகையாளர்களை உருவாக்குவதில் பீட்டர் மேக்லர் போல எனது கணவர் தீவிரமாகச் செயல்பட்டதில்லை. ஆனால் தனது இலக்குகளை எட்ட கடந்த 20 ஆண்டுகளாக அவர் பரபரப்பாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டுள்ளார். இக்கட்டான தருணங்களில்கூட எப்படி துணிச்சலுடனும், கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நிமிடம் வரை அவர் எனக்குக் கற்றுக்கொடுக்கிறார்" என்றார்.
இவ்வைபவத்தின் போது ஆரம்ப உரையில் வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் மார்க்கசு புரோச்லி தெரிவிக்கையில், அடக்கு முறை ஆட்சி நிலவும் பிரதேசங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு தமது மரியாதையைச் செலுத்தினார்.
இவ்வாறு சிறந்த முறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களின் துணிகர செயற்பாடுகளுக்காக பீட்டர் மெக்லர் விருதினை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.
இதேவேளை, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயலணி, 2009 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதுக்கும் திசைநாயகத்தை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
- சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்
மூலம்
[தொகு]- "Wife of jailed SLankan reporter accepts award". ஏஎஃப்பி, அக்டோபர் 3, 2009
- "திஸ்ஸாநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டது". வீரகேசரி, அக்டோபர் 4, 2009
- "பெற்றுக்கொண்டார் இலங்கைப் பத்திரிகையாளர் திசைநாயகத்துக்கு விருது: மனைவி பெற்றுக்கொண்டார்". தினமணி, அக்டோபர் 3, 2009