உள்ளடக்கத்துக்குச் செல்

தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை உருவாக்குபவருக்கு கேரள அரசு பரிசு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 23, 2009, கேரளம், இந்தியா:


இந்தியாவின் கேரள மாநிலத்தில் தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை உருவாக்குபவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்தியாவில் அதிகமாக தேங்காய் விளைவிக்கும் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஆட்பற்றாகுறையால் தேங்காய் பறிப்பு குறைந்துள்ளது. இதனால் தேங்காய் உற்பத்திகளும் குறைந்துள்ளன.


முன்பெல்லாம் இடுப்பில் கயிற்றை கொண்டு தேங்காய் மரத்தில் ஏறுபவர்களை சர்வசாதாரணமாக பார்க்க கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது மாறி வரும் சமுதாய மற்றும் பொருளாதார நிலைகளால் தேங்காய் பறிக்கும் ஆட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


தேங்காய் பறிப்பது சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் பணியாக இருந்தது, தற்போது சமுதாய ஜாதி விலங்குகளை உடைத்து கொண்டு இவர்கள் வெளி வருகின்றனர். இவர்களின் இளைய தலைமுறையினர் பள்ளிக்கூடத்திற்கு செல்கின்றனர். வயதானவர்கள் வேறு வேலைக்கு செல்கின்றனர்.


இத்தகைய காரணங்களால் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் இல்லை. இதனால் முன்பு ஒரு முறை சிறப்பாக இருந்த தேங்காய் தொழில் இப்போது நசிவு ஏற்பட்டுள்ளது.


ஆகவே தான் தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை உருவாக்குபவருக்கு பரிசு என்று அறிவித்துள்ளது அரசு. இந்த இயந்திரத்தை எந்த நாட்டை சேர்ந்தவரும் உருவாக்கலாம், ஒரே ஒரு விதிமுறை தான், தரையில் இருந்து இயந்திரம் சுமார் முப்பது மீட்டர் உயரத்திற்கு சென்று தேங்காயை பறிக்க வேண்டும். மற்றுமொரு விஷயம், இயந்திரம் எளிதில் தூக்கி செல்ல கூடியதாகவும், விலை மலிவாகவும் இருக்க வேண்டும்.


இயந்திரத்தை உருவாக்குபவருக்கு தொழிற்சாலையை ஆரம்பிக்க அனைத்து உதவிகளையும் செய்யப் போவதாகவும், ஏற்றுமதி செய்வதற்கு உதவப் போவதாகவும் கூட கேரள அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது.

மூலம்

[தொகு]