உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமாளை வழிமறித்த திருமங்கை மன்னன்

விக்கிசெய்தி இலிருந்து

திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி.

[தொகு]

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான நேற்று மாலை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையொட்டி, நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சோழப் பேரரசில் தளபதியாக இருந்து பின்னர் சிற்றரசரான திருமங்கைமன்னன் பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியால் ஸ்ரீரங்கம் கோயிலில் மதில்சுவர், கோபுரம் உள்பட பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார்.

திருமங்கை மன்னன் வழிப் பறி.

[தொகு]

அவர் கோயிலில் திருப்பணியை மேற்கொண்டு இருந்தபோது போதுமான நிதியில்லாமல் திருமங்கைமன்னன் கவலையடைந் தார். இதற்காக அவர் வழிப் பறி கொள்ளையில் ஈடுபட்டு அதனால் வரும் பொருளைக் கொண்டு திருப்பணிகளை செய்து வந்தார். தன்னுடைய பக்தனாக இருந்தாலும் தவறான வழியில் வரும் பணத்தை கொண்டு திருப்பணிகள் செய்வதை தடுத்து நிறுத்த பெருமாள் மாறுவேடத்தில் வருகிறார். இதை அறியாமல் திருமங்கை மன்னன் வழக்கம் போல் வழிப்பறியில் ஈடுபடுவது போல பெருமாளையும் வழிமறித்தார்.

மன்னனின் செயல்களை தடுத்த பெருமாள்.

[தொகு]

அப்போது பெருமாள் மன்னனின் செயல்களை தடுப்பதற்காகவும், திருத்துவதற்காகவும் திருமங்கை மன்னன் காதில் 'ஓம் நமோ நாராயணா' என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை ஓதினார். இந்த மந்திரத்தின் மகிமையால் திருமங்கைமன்னன் திருந்தி பெருமாள் அருளாசியுடன் திருமங்கையாழ்வாராக மாறினார். ஆழ்வாராக மாறியதும் வாடினேன் வாடி என்ற பாடலை பாடினார். இதனை கேட்ட பெருமாள் மகிழ்ச்சி அடைந்தார் என புராண வரலாறு கூறுகிறது.

8ம் நாள் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி.

[தொகு]

இந்த நிகழச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாள் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி நேற்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை கோயில் வளாகத்தில் உள்ள மணல்வெளியில் நடத்திக் காட்டப்பட்டது. அதனையொட்டி, நேற்று நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து மாலை 4,30 மணிக்கு புறப்பட்டு மணல் வெளிக்கு வந்தார். அங்கு நம்பெருமாள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை வையாளி கண்டருளிய பின்னர் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கைமன்னன் மரபில் வந்தவர்கள்.

[தொகு]

அதுசமயம் திருமங்கைமன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் முத்துராஜா குடும்பத்தினர் மற்றும் அவர்கள் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது.அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சேர்ந்தார். அதன்பின் அரையர் சேவைக்கு பின்னர் நம்பெருமாள் இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். வேடுபறி உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாசல் வழியே மணல் வெளிக்கு வந்ததால் நேற்று பரமபதவாசல் திறப்பு இல்லை. [1] [2]

மூலம்
[தொகு]
  1. வேடுபறி நிகழ்ச்சி
  2. பெருமாளை வழிமறித்த திருமங்கை மன்னன்