உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு சைப்பிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அரசுத்தலைவர் தேர்தல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 18, 2010

வடக்கு சைப்பிரசில் இன்று நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தல் மத்தித்தரைக்கடல் தீவான சைப்பிரசை மீள ஒற்றுமைப்படுத்தும் முயற்சிக்கு வலுச்சேர்க்குமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


இத்தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக தற்போதைய அரசுத்தலைவர் மெகுமெட் அலி தலாட், மற்றும் துருக்கிய சைப்பிரசுப் பிரதமர் டேர்விசு எரோகுலு ஆகியோர் ஆவர்.


திரு தலாட் வடக்கு சைப்பிரசு மற்றும் தெற்கு சைப்பிரசுகளை இணைப்பதற்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவைப் பேணவும் விரும்புகிறார். அதே வேலையில், திரு, எரோகுலு ஒரு தேசியவாதியாவார். இரண்டு நாடுகள் என்ற அமைப்பை ஆதரிப்பவர்.


1974 ஆம் ஆண்டில் துருக்கிய ஆக்கிரமிப்பின் பின்னர் சைப்பிரசு இரண்டு நாடுகளாகப் பிரிந்தன.


வடக்கு சைப்பிரசு எனப்படும் துருக்கிய சைப்பிரசுக் குடியரசு இதுவரையில் அங்கீகரிக்கப்படாத நாடாகவே விளங்குகிறது. அத்துடன் மேற்குலக நாடுகள் அதன் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றனர். இதனால் பெரும்பாலான துருக்கிய சைப்பிரசு மக்கள் இரு நாடுகளையும் இணைக்கவே விரும்புகின்றனர்.


சென்ற தேர்தலில் இருநாடுகளையும் இணைப்பதற்கு ஆதரவாகவே திரு தலாட் அவர்களுக்கு துருக்கிய சைப்பிரசு மக்களின் பெரும்பான்மையானோர் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர் என பிபிசியின் செய்தியாளர் தபீத்தா மோர்கன் தெரிவித்தார்.


ஆனாலும், கிரேக்க சைப்பிரசுத் தலைவர்களுடன் தலாட் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதும் அவை வெற்றியளிக்கவில்லை.


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதபடியால், மக்கள் இம்முறை தலாட் அவர்களுக்கு வாக்களிக்க பின்வாங்குவதாக தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தம் 164,000 வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் வலதுசாரியான எரோகுலுவுக்கு சாதகமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


எரோகுலு வெற்றி அடைந்தால் துருக்கிய சைப்பிரசுவின் பிரச்சினை சில காலத்துக்குத் தீர்க்கப்படாமலே போகலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இதனால் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ள எடுக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்படலாம்.

மூலம்

[தொகு]