உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 19, 2009, இலங்கை:


விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலொன்றினை இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியில் வைத்து கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.


மூன்று பேர் பயணிக்கக் கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்நீர்மூழ்கிக் கப்பல் சனிக்கிழமை இரவு முல்லைத்தீவின் வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மீன் போன்ற தோற்றத்தினையுடைய இந்நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 25 அடி நீளமும் 4 அடி அகலமும் 41/2 அடி உயரத்தையும் கொண்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.


வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் கடலுக்குள் 40 அடி ஆழத்தில் இந்நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி வாகனம் பாவனைக்குகந்த நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.


இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தேடுதல்களை இராணுவத்தினர் நடத்தி வரும் அதேநேரம் இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியிலும் தேடுதல்களை நடத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.


புலிகளின் மேற்படி நீர்மூழ்கிக் கப்பலுக்குள்லிருந்து டீசல் என்ஜிகள், சமநிலை தாங்கி, சுழியோடிகளுக்கான அங்கிகள், தமது இருப்பிடத்தைக் காட்டும் கருவி ஆகியன மீட்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.


இராணுவத்தின் 56 ஆம் படைப் பிரிவு மற்றும் எட்டாம் படையணியினைச் சேர்ந்த சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாகவே புலிகளின் இத்நீர்மூழ்கிக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் புலிகளால் பயன்படுத்தி வந்த பல நீர்மூழ்கிக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்

[தொகு]