அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 18, 2012

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


அதே நேரம் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ள தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நேர்மையான அரசியல் மீள் இணக்கப்பாட்டை எட்டும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபடும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.


இதேவேளை அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் அவற்றை காலதாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவும் பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்க தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா தெற்கிலும் வடக்கிலும் இந்திய முதலீட்டில் நடந்துவரும் வேலைத்திட்டங்களையும் சென்று பார்வையிடவுள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]