உள்ளடக்கத்துக்குச் செல்

அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 20, 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழி எனக் கருதப்படும் சசிகலாவையும் அவரின் குடும்பத்தினர்களான சசிகலாவின் கணவர் நடராஜன், வளர்ப்பு மகன் சுதாகர் உட்பட திவாகரன், பாஸ்கரன், வெங்கடேஷன், ராமச்சந்திரன், ராஜராஜன், குலோத்தூங்கன், ராவணன், மோகன் ஆகிய 12 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து இருந்து நீக்கப்படுவதாக அதிமுக செயலாளர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.


எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்த ஜெயலலிதா, சசிகலாவை உற்ற தோழியாக தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார். நாளுக்கு நாள் இவர்களது நட்பு உச்சத்தை பெற்றது. இதனையடுத்து, ஜெயலலிதா ஆட்சியில், சசிகலா ஜெயலலிதாவிற்கு அறிவுரை வழங்கி வந்தார். மேலும் தன் குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சியில் சேர்க்க வைத்தார். சசிகலாவின் அக்காள் மகன்கனான சுதாகரை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அதுமட்டுமின்றி தன் வளர்ப்பு மகன் திருமணத்தை தமிழகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டாக ஜெயலலிதா நடத்தியிருந்தார்.


இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீக்கப்பட்ட இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கத்தில் சசிகலாவுக்கூடாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக பதவி துறந்த சூழ்நிலையில் சசிகலாவும் அவரின் குடும்பத்தினரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


எதிர்வரும் 30ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடக்கவுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுச் செயலாளரான ஜெயலலிதா எடுத்துள்ளார்.


இச்செய்தி வெளியாகியதும், திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே கூடிய அ.தி.மு.க.வினர் சிலர், பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நிர்வாகிகள் ஒன்பது பேர் மொட்டை அடித்து பட்டாசு வெடித்தனர். கட்சித் தொண்டர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மூலம்

[தொகு]