அமெரிக்க ஆரம்பப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 20 மாணவர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 15, 2012

அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் உள்ள நியூடவுன் ஆரம்பப் பள்ளியில் நேற்றுக் காலை துப்பாக்கி ஏந்திய ஒருவன் சரமாரியாகச் சுட்டதில் 20 சிறுவர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர் எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். துப்பாக்கிதாரியின் அடையாள இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அப்பாடசாலையில் பணியாற்றும் ஒரு ஆசிரியையின் 20 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆசிரியை துப்பாக்கிதாரியால் அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்ட பின்பே அவன் பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்றாவது சூட்டுச் சம்பவம் இதுவாகும், அத்துடன் அமெரிக்க வரலாற்றிலேயே பள்ளிச் சூட்டு நிகழ்வுகளில் இது இரண்டாவது மிகப் பெரியது எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் 2007 ஆம் ஆண்டில் வெர்ஜீனியா தொழிநுட்பக் கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர்.


நெற்றைய நிகவில் 18 மாணவர்கள் உடனடியாகவே இறந்தனர் எனவும், ஏனைய இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் கூறினர். இறந்த சிறுவர்கள் அனைவரும் ஆறு முதல் ஏழு வயதானவர்கள் ஆவர். இறந்த ஆறு வயதானவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் ஆவர். பள்ளியின் ஒரு பகுதியில் உள்ள இரு அறைகளில் இந்தச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


வெள்ளை மாளிகையில், அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா இறந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். "இந்தப் பிள்ளைகளின் பெற்றோர், சகோதரிகள், சகோதரர்கள், உறவினர்களுக்காக, மற்றும் இறந்த ஏனையோரின் குடும்பத்தினருக்காக இன்று எமது இதயம் உடைந்துள்ளது," எனக் கண்ணீர் மல்க அவர் குறிப்பிட்டார்.


மாநிலத்தில் மிகத் தரம் வாய்ந்ததாகக் கூறப்படும் சாண்டி ஹுக் பள்ளியில் 5 முதல் 10 வயது வரையான 600 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கின்றனர்.


மூலம்[தொகு]