அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை கைவிட சீனா புதிய செயற்கைக்கோளை ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 29, 2011

ஜி.பி.எஸ்., எனப்படும் புவியிடங்காட்டித் திட்டத்தில், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை கைவிட, சீனா பெய்தோ என்ற புதிய செயற்கைக்கோளைக் கடந்த புதன்கிழமை விடியற்காலை 5:44 மணியளவில் சி சான் ஏவு மையத்திலிருந்து லோங்மார்ச் 3-ஏ என்ற ஏவூர்தி ராக்கெட்டு மூலம் திட்டமிடப்பட்ட புவியின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தியது. சீனாவின் பெய் தோ வழிகாட்டல் தொகுதியைச் சேர்ந்த 4வது புவி நிலை செயற்கைக்கோள் இதுவாகும்.


ஜிபிஎஸ் என்பது செயற்கைக்கோள் மூலம் பூமியில் இருப்பிடங்களை தெரிந்து கொள்ள உதவும் ஒரு தொழில்நுட்பமாகும். இது அமெரிக்காவின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க உதவியை எதிர்பார்க்காமல் செயல்பட இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணை நோக்கி பாய்ந்ததும் அந்நாட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.


பெய் தோ வழிகாட்டல் தொகுதி, சீனா மற்றும் அதன் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு வழிகாட்டல் சேவை புரிந்து, போக்குவரத்து, மீன்பிடித்தல், வனத் தொழில், வானிலை, செய்தித் தொடர்பு முதலிய துறைகளில் இதனை பயன்படுத்துவோரின் தேவைகளை நிறைவேற்றும். 2020ம் ஆண்டுக்குள், பெய் தோ வழிகாட்டல் தொகுதியில் 30க்கு மேற்பட்ட செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டு அத்தொகுதி முழுமையடையும் என்று தெரிகிறது.


இதற்கிடையில், லோங்மார்ச்2-சி ஏவூர் மூலம், சிய்ச்சியன்11-02 என்ற செயற்கைக் கோள் ஒன்று, சீனாவின் சியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.42மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் ஆய்வு நோக்கிற்காக, இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.


மூலம்[தொகு]