அருணாச்சலப் பிரதேசத்தில் தொங்கு பாலம் விழுந்ததில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 31, 2011

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் தொங்கு பாலம் ஒன்று அறுந்து வீழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 இற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி இறந்தனர்.


மேற்கு காமங் மாவட்டத்தில் உள்ள காமங் ஆற்றுப்பகுதியின் மேல் ஒரு பழமையான தொங்கு பாலமே நேற்று முன் தினம் உடைந்து வீழ்ந்துள்ளது. 60 முதல் 70 பேர் வரை இப்பாலம் வழியாக ஒரே நேரத்தில் சென்று கொண்டிருந்த போதே பாரம் தாங்காமல் பாலம் அறுந்து விழுந்தது.


ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பலரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அருகில் இருந்த மலைவாழ் மக்கள் சிலரை காப்பாற்றினர். 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.


இம்மாவட்டக் காவல்துறை அதிகாரி கிமே அயா விபத்து குறித்து கூறுகையில், "70 மீட்டர் நீளமும், 40 அடி அகலமும் கொண்ட இந்த பாலம் செப்பா நகரை இணைக்கிறது. ஒரே நேரத்தில் பலர் சென்றதால் பாலம் அறுந்து விழுந்திருக்கிறது. பலரது உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் மத்திய பொலிஸ் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்


பாலம் உடைந்து வீழ்ந்தது இந்தியாவில் ஒரே வாரத்தில் இது இரண்டாவது தடவையாகும். சென்றவாரம் அக்டோபர் 23 இல் டார்ஜிலிங் பகுதியில் மரப்பாலம் அறுந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர், 132 பேர் காயமடைந்தனர்.


மூலம்[தொகு]