அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 26, 2011

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை நேற்று திங்களன்று தாக்கல் செய்துள்ள முதலாவது கூடுதல் குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.


தில்லியில் இவ்வழக்கை விசாரித்து வருகின்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியின் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு சட்டம் பிரிவு எண் 7 மற்றும் 11ன் கீழ் கனிமொழியின் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கனிமொழி தவிர கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் சரத்குமார், சுவான் டெலிகாம் நிறுவனத்தின் முதல்வர் சாகித் உசுமான் பால்வாவின் சகோதரரான ஆசிஃப் பல்வா, குசெகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநரான ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவனத்தைச் சேர்ந்த கரீம் முரானி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களை நடுவண் புலனாய்வுத் துறை இன்னும் கைது செய்யவில்லை. இவர்கள் வரும் மே 6ஆம் தேதி நீதிமன்றத்தில் சமூகம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஊழல் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி தொகை வேறு நிறுவனங்கள் வழியாகக் கைமாறியுள்ளது என்று விசாரணைகள் காட்டுவதாக மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக மத்திய புலனாய்வுத் துறை கருதுகிறது.


சிபிஐ டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் கலைஞர் தொலைக்காட்சியின் முக்கிய பங்குதாரரான தயாளு அம்மாளின் பெயரும் சேர்க்கப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையில் முன்னாள் திமுக அமைச்சர் ஆ. ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.


கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


இதே நேரம் கனிமொழி உட்பட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]