ஆங் சான் சூச்சி பர்மிய நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுப்பதில் தடங்கல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 23, 2012

உறுதிமொழி எடுப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக சனநாயகத்துக்கு ஆதரவான ஆங் சான் சூச்சியின் கட்சியினரின் ஒன்றியொதுக்கலையும் பொருட்படுத்தாது பர்மிய நாடாளுமன்றம் இன்று கூடியது.


அரசியலமைப்பைப் "பாதுகாப்போம்" என்பதை விட "மதிப்போம்" என உறுதிமொழி எடுப்பதாக மக்களாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பது என்பது சனநாயகத்திற்கு எதிரானது என அவர்கள் கருதுகின்றனர். உறுதிமொழி வாசகங்கள் மாற்றப்பட்டால் மட்டுமே தாம் நாடாளுமன்றத்தில் பங்கேற்போம் என தேசிய முன்னணியின் பேச்சாளர் ஓன் கியாயிங் தெரிவித்தார். ஆனாலும் இந்தப் பிரச்சினை மிக விரைவில் தீர்த்து வைக்கப்படும் என அக்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


ஏப்ரல் 1 ஆம் நாள் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 45 இடங்களில் 43 ஐ தேசிய முன்னணி கைப்பற்றியிருந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ஆங் சான் சூச்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றார்.


பர்மாவின் அரசியலமைப்பு 2008 ஆம் ஆண்டில் அந்நாட்டின் இராணுவத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத்தில் 25 வீதமான உறுப்பினர்கள் இராணுவத்தில் இருந்து நியமிக்கப்படுவார்கள். இராணுவத்தினரும் பர்மிய இராணுவத்துக்குச் சார்பான ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் நாடாளுமன்றத்தில் 80 விழுக்காடு உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் ஆங் சான் சூச்சியின் தேசிய முன்னணியினர் பங்குபற்றவில்லை.


இதற்கிடையில், பர்மாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஓராண்டுக்கு விலக்கி வைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் ஆயுத விற்பனைத் தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் ஏற்கனவே சில தடைகளை விலக்குவதாக அறிவித்துள்ளன.


மூலம்[தொகு]