ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஆர்ப்பாட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

செப்டம்பர் 2, 2010

வடக்கு ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆப்கானிய அகதிகள் பலர் முகாமை உடைத்துக் கொண்டு வெளியேறி அருகில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தமது அகதி விண்ணப்பங்களை விசாரணைக்கு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என அவர்கள் குற்றம் சாட்டினர்.


89 ஆண் அகதிகள் இப்போராட்டத்தில் குதித்திருந்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் காவல்துறையினரால் திரும்பவும் தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஐவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.


போராட்டத்தில் இறங்கிய அகதிகளில் பலர் இன்று டார்வின் நகரில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முகாமுக்கு விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இத்தடுப்பு முகாமில் உள்ள பலர் அங்கு 10 மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


"என்னை இப்போது அனுப்பினால் எனது தலையைக் கொய்து விடுவார்கள்," போராட்டத்தில் ஈடுபட்ட கரெமிசயெட் என்பவர் கூறினார். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

மூலம்