இங்கிலாந்துடனான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இந்தியா படுதோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 23, 2011

இங்கிலாந்து அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரின் (test) இறுதியான 4-வது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக வென்றது.


இத்தோல்வியை அடுத்து ஐ.சி.சி பன்னாட்டுத் தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஏற்கெனவே 3 தேர்வுப் போட்டிகளில் தோற்றபோது முதலிடத்தில் இருந்து இந்திய அணி 2-வது இடத்துக்கு வந்தது. இங்கிலாந்து 125 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இப்போது இந்திய அணி 117 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.


11 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி இந்த தேர்வுத் தொடரில் ஒரு போட்டியைக் கூட வெற்றி தோல்வியின்றி முடிவு செய்ய முடியாமல் முழுமையாக இழந்துள்ளது. இதற்கு முன் 2000 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் (2-0), ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் (3-0) ஆகியவற்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.


இந்திய அணி 79 ஆண்டுகாலமாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளைக் கொண்ட தேர்வுத் தொடரில் 3 முறை இவ்வாறு அனைத்துப் போட்டிகளையும் இழந்துள்ளது. 1959-ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-5 என்ற கணக்கிலும், 1961-62-ல் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் 0-5 என்ற கணக்கிலும், 1967-68-ல் ஆஸ்திரேலியாவிடம் 0-4 என்ற கணக்கிலும் இந்தியா தொடரை முழுமையாக இழந்துள்ளது.


மூலம்[தொகு]