இந்திய அணுமின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு பவர் பைனான்ஸ் நிறுவனம் உதவி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 31, 2010

இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் அணுமின் நிலையங்களை மேலும் விரிவுபடுத்தி அமைப்பதற்கு பவர் பைனான்ஸ் நிறுவனம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் புது தில்லியில் கடந்த வியாழக்கிழமை 2010 ஒக்டோபர் 28 இல் கையெழுத்தானது. இந்த உடன்பாட்டின் படி, பவர் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவியும், பங்குகளில் முதலீடு செய்யவும், நிதி ஆலோசனைகளும் இந்திய மின் கழகத்திற்கு வழங்கும்.


இந்திய அணுமின் கழகம் மும்பையில் இருந்து செயல்படும் நடுவண் அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்பொழுது 19 அணு மின் நிலையங்களை செயல்படுத்தி, 4560 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.


கூடங்குளத்தில் இரு 1000 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் உருசியாவின் தொழில் நுட்ப உதவியுடனும், கர்நாடகத்தில் உள்ள கைகாவில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலையும் விரைவில் கட்டி முடிக்கப்படும்.‎


இதைத் தவிர கக்ரபார் அணுமின் நிலையம், குஜராத் மாநிலத்தில் கக்ரபாரிலும், ராஜஸ்தான் அணுமின் நிலையம், ராவட்பட்டாவிலும் முறையே முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்துடன் இரு 700 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இவை யாவும் உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் கனநீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளைக் கொண்டது.


இந்திய அணு மின் கழகம் 2017 ஆம் ஆண்டில் அணு மின் நிலையங்கள் மூலம் 9580 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், 2000 ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவும், 2020 ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட் அளவும் படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.


இந்த விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிதியுதவி, பங்குகளில் பங்கேற்பு மற்றும் ஆலோசனைகள் வழங்க பவர் கொர்போரேசன் நிறுவனம் முன்வந்துள்ளது.


மூலம்[தொகு]