உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை லட்சுமி சாகல் காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 23, 2012

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், நேத்தாஜி சுபாசு சந்திர போசின் நெருங்கிய உதவியாளருமாக இருந்த லட்சுமி சாகல் தனது 97 வது அகவையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் காலமானார்.


2005 ஆம் ஆண்டில் லட்சுமி சாகல்

மருத்துவரான லட்சுமி சாகல் 1943ஆம் ஆண்டு நேத்தாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர். 20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர்.


நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர். 1971 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்) கட்சியில் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது இவருக்குக் கிடைத்தது. 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


சென்னையில் 1914 ஆம் ஆண்டில் பிரபல வழக்கறிஞர் எஸ். சுவாமிநாதன் என்பவருக்குப் பிறந்தவர் லட்சுமி. 1938 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்று அங்கு மருத்துவராகப் பணியாற்றிய பின்னர் 1943 இல் இந்தியா திரும்பி, இந்திய தேசியப் படையில் இணந்தார். 1947 இல் கான்பூரைச் சேர்ந்த கேர்ணல் பிரேம் குமார் சாகல் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் மகள் சுபாஷினி அலி பொதுவுடமைக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்.


சூலை 19 இல் கான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இன்று காலை 11:20 மணிக்கு மாரடைப்பினால் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மூலம்

[தொகு]