இந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 18, 2011

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இந்த ஆண்டில் மேலும் 4 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இந்திய விண்வெளி ஆய்வு மையம் 1972ம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக, அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இஸ்ரோ வடிவமைத்துள்ள ஜி சாட்-12 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி.17 ராக்கெட் மூலம் சூலை இரண்டாவது வாரத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளதுடன், செப்டம்பர் மாதத்தில் மேகா டிரோபிக்ஸ் என்ற செயற்கைக்கோளும், கடல்வளத்தை ஆய்வதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்கள் வரும் டிசம்பர் மாதத்திலும் விண்ணில் ஏவப்படவுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மைய திரவ இயக்க திட்ட மையத்தில் "ராக்கெட் உந்து தொழில்நுட்ப எல்லைகள் விரிவாக்கம்' தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கிய பின்பு செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கே. ராதாகிருஷ்ணன் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.


இஸ்ரோ 1969 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை தினத்தன்று இந்தியாவின் விண்வெளித் தந்தை என அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது. கடந்த 1993 முதல் 2010ம் ஆண்டு வரை பறக்கவிடப்பட்ட 17 ராக்கெட்டுகளில், 20 இந்திய செயற்கைக் கோள்களும், 25 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட்டன. மூன்று செயற்கை கோள்களுடன் இந்திய ராக்கெட் பிஎஸ்எல்விசி16 ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் பி.எஸ்.எல்.வி. வரிசையில் 18வது ராக்கெட் ஆகும்.


மூலம்[தொகு]