உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்தடை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 31, 2012

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மொத்தம் 14 மாநிலங்களின் இன்று இரண்டாவது நாளாக மின்தடை ஏற்பட்டதால் நாட்டின் அரைவாசிப் பகுதி இருளில் மூழ்கின.


வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மின்தொகுப்புகள் பழுதடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மொத்தம் 300 தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே தொடருந்துகள் நின்று கொண்டிருப்பதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் பேருந்துகளுக்கு காத்து நின்றபடியால், சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன.


மின் தொகுப்பில் எவ்வாறு கோளாறு எற்பட்டதென்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்த மின்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே, சில மாநிலங்கள் கூடுதலாக மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.


இந்தியாவில் அதிகரித்து வரும் மின் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்துறையில் இருக்கும் காலத்துக்கு ஒவ்வாத கட்டமைப்புகளால் ஈடுகொடுக்க முடியாத சூழல் உள்ளது என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


வடக்கே தில்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மற்றும் கிழக்கே மேற்கு வங்கம், பிகார், ஒரிசா, ஜார்க்கந்து ஆகிய மாநிலங்கள் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில், சில சில இடங்களில் அடிக்கடி மின் தடைகள் ஏற்படுவது வழமை எனினும், இவ்வாறு நாட்டின் பெரும் பகுதி இருளில் மூழ்கியது கடைசியாக 2001 ஆம் ஆண்டில் இடம்பெற்றது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்

[தொகு]