இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 31, 2013

இந்தியாவின் 29வது புதிய மாநிலமாக தெலுங்கானாவை ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து பிரித்தெடுத்து உருவாக்குவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நேற்று முடிவு செய்ததை அடுத்து ஆந்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம்பெற்றுள்ளன.


35 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தெலுங்கானா பிரதேசம் ஆந்திரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் ஐதராபாது உட்பட 10 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. புதிதாக உருவாகவிருக்கும் தெலுங்கானா மாநிலத்தின் பரப்பளவு 115,000 சதுர கிலோமீட்டர் ஆகும். ஐதராபாது இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமும் ஆகும். ஐதராபாத் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் இணைந்த நலைநகராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் அதன் பின்னர் ஆந்திர மாநிலம் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்க வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கானாவில், இந்த புதிய மாநிலத்திற்கான போராட்டம் கடந்த 50 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. பொருளாதார ரீதியில் தாங்கள் பின் தங்கி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.


புதிய மாநிலம் உருவாக்குவதற்கான இறுதி முடிவு இந்திய நடாளுமன்றத்திலேயே எடுக்கப்படும். அத்துடன் மாநில சட்டமன்றமும் புதிய மாநிலம் உருவாகுவதற்கு ஆதரவாக தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.


தெலுங்கானா புதிய மாநிலமாக உருவாவதற்கு ஆளும் கட்சியிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததையொட்டி, கோர்க்காலாந்து உட்பட நாட்டின் பிற இடங்களில் இருந்து எழும் தனி மாநிலக் கோரிக்கைகள் எதிர்காலத்தில் வலுப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மூலம்[தொகு]