இந்தியாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 75 படையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 6, 2010


இந்தியாவில் இயங்கி வரும் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 75 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்டேவாடா மாவட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


இன்று அதிகாலை ஏறத்தாழ 6 முதல் ஏழு மணியளவில் அமுக்ரானா என்ற அடர்ந்த வனப் பகுதியில், அங்குள்ள சாலைகளை ஒழுங்குபடுத்திவிட்டு வரும் வழியில் மேற்கண்ட சம்பவம் நடந்தது. முன்னதாக வீதியில் இருந்த கண்ணிவெடி வெடித்து வாகனத்தில் இருந்தவர்கள் கொல்லப்பட்டர்கள். பிறகு அங்கு பதுங்கியிருந்த போராளிகள் சுற்றிவளைத்து சரமாரியாக காவல்துறையினரையும் சிஆர்பிஎஃப் சேர்ந்த துணை இராணுவப் படையினரையும் சுட்டுக்கொன்றனர்.


மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி உள்பட 74 பேரும், மாநில காவல்துறையின் தலைமைக் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.


மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட உலங்குன்வானூர்தியும் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். காயமடைந்த 7 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சர் திரு ப. சிதம்பரம், இதனை நிகழ்த்தியவர்கள் மனிதத்தன்மையற்றவர்கள் என்று தெரிவித்தார்.

மூலம்[தொகு]