இராசீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை 8 வாரங்கள் தள்ளி வைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 30, 2011

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரணதண்டனையை இரத்துச் செய்யக்கோரி மேன் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தற்காலிகத்தடை விதித்தது. நீதிமன்ற ஆணையை வேலூர் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.


வழக்கில் ஆஜராக தில்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோகித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் உட்பட மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர்.


மூவரும் தாக்கல் செய்த மனுக்களில், "நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம். இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மூன்று பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். பேரவையில் இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.


நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]