இலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 20, 2011

இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) இருபது20 தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியத் துடுப்பாட்ட வாரியம் தடை விதித்துள்ளது.


இலங்கை பிரிமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சூலை 19 தொடங்கி ஆகத்து 4 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியாவின் 12 வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரவீன் குமார், முனாப் படேல், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக், ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, சவ்ராப் திவாரி, உமேஷ் யாதொவ், வினாய்குமார், மனிஷ் பாண்டி, போல் வல்தாட்டி ஆகிய வீரர்களே இந்த தொடரில் விளையாட இருந்தனர். எனினும் இவர்களை இந்தியத் துடுப்பாட்ட வாரியம் இந்தத் தொடரில் விளையாட அனுமதி மறுத்துள்ளது.


இது குறித்து இந்திய துடுப்பாட்ட வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளை அந்த நாட்டு துடுப்பாட்ட வாரியம் நடத்தவில்லை. மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் இதை நடத்தவுள்ளார். எனவே அதிகாரப்பூர்வமற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனியார்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் நமது வீரர்களை அனுப்புவதில்லை என்பது இந்திய துடுப்பாட்ட வாரியத்தின் கொள்கை முடிவாகும் என்றார். இதன்படி இந்திய கிரிக்கெட் சபை நடத்தும் ஐ.பி.எல். இல் இருந்து எஸ்.எல்.பி.எல். முற்றிலும் மாறுபட்டது என அறிவித்துள்ள பி.சி.சி.ஐ. இந்திய வீரர்களுக்கு இந்த தொடரில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டது.


அதேநேரம் எஸ். எல். பி. எல். தொடர் ஐ. சி. சி. அங்கீகாரம் பெற்ற தொடர் எனவும் இந்திய துடுப்பாட்ட வாரியத்துக்கு இலங்கை சபை பதில் அளித்துள்ளது. இதில் சிங்கப்பூரை மையமாக கொண்ட சமர்செட் வென்சர்ஸ் நிறுவனம் தொடரின் விளம்பர உரிமையை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் இலங்கை துடுப்பாட்ட சபை குறிப்பிட்டுள்ளது. இந் நிலையில் இலங்கை துடுப்பாட்ட சபை இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று அவசர குழுக்கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிய வருகிறது.


இவ்வாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களை அவர்கள் இங்கிலாந்துப் போட்டித் தொடர்களில் பங்குபற்றுவதற்காக லீக் போட்டிகளில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா அனுமதிக்கவில்லை.


மூலம்[தொகு]