இலங்கையின் வடக்கே மக்களின் விபரப் பதிவு இடைநிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 4, 2011

இலங்கையின் வடக்கே பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை சட்டமாஅதிபர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இதற்கான இணக்கத்தைத் தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பதிவு செய்வதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ. சரவணபவன், எஸ். சிறீதரன் ஆகியோரால் வக்குப் பதியப்பட்டிருந்தது.


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை சிங்கள மொழியிலான பதிவுப் பத்திரங்களை நிரப்பி புகைப்படங்களை இணைத்து பதிவு செய்யுமாறு இராணுவம் நிர்ப்பந்திப்பது தொடர்பாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவசரகாலச் சட்டவிதிகள் சில நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பதிவு முறை சட்டமுரணானது என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, தேவையான சட்டவிதிமுறைகளை தயாரிக்கும் வரை குறித்த பிரதேசங்களில் மக்கள் பதிவு முறையை நிறுத்துவதாக அரச தரப்பு சட்டத்தரணி கூறினார். பதிவு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறையொன்றினை ஒழுங்கு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு சட்ட மாஅதிபர் உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மூலம்[தொகு]