இலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 17, 2012

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாத இறுதிப் போரின் முன்பும், அதன் போதும், பின்பும் ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் பொது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து அமைப்பியல் நோக்கில் பெரும் தோல்வி அடைந்துள்ளதாக ஐ.நா வின் உள்ளக அறிக்கை ஒன்று கூறுகிறது.


நவம்பர் 13, 2012 அளவில் பிபிசி உட்பட்ட ஊடகங்களுக்கு கசியப்பட்ட இந்த உள்ளக அறிக்கை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனினால் கோரப்பட்டது ஆகும். இந்த அறிக்கையைத் தயாரித்த மீளாய்வுக் குழுவிற்கு மூத்த ஐ.நா அலுவலகர் சார்ல்சு பீட்ரி தலைமை வகித்தார். உள்ளக அறிக்கை தொடர்பான செய்தியையும், அது தொடர்பான கருத்தாய்வுகளையும் பிபிசி, சிபிசி, சி.என்.என், ராய்ட்டர்சு, அல்ஜசீரா உட்பட்ட அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையின் இறுதி வடிவம் இனிமேலேயே வெளியிடப்பட இருக்கிறது, எனினும் கடுமையான விமர்சனங்கள் சில இறுதி வடிவத்தில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளன.


ஐ.நா வின் உள்ளக அறிக்கை இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் முடிவுகளை உறுதி செய்வதாக சார்ல்சு பீட்ரி தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்தும், குறிப்பாக போர்ப் பகுதிகளில் இருந்து மக்களைக் கைவிட்டு ஐ.நா பிரதிகள் வெளியேறியது, கொழும்பில் இருந்த ஐ.நா பிரதிநிதிகள் பொதுமக்கள் கொல்லப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதை தமது பொறுப்பாகக் கருதாமை, பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா வின் மேலிடத்தில் இருந்து வழிகாட்டல்கள் வழங்கப்படாமை, இலங்கை அரசின் அழுத்தத்துக்கு உட்பட்டு இலங்கை அரசே மிகப் பெரும்பான்மையான பொதுமக்கள் கொலைகளுக்குக் காரணம் என்பதை எடுத்துச் சொல்லாமை, பொதுமக்கள் இழப்புகளை வெளியிடாமை, இலங்கை அரசின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்தமை, அமைப்பு முறையியல் தோல்விகள் எனப் பல்வேறு தோல்விகளை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.


இந்த அறிக்கையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புகலிடத் தமிழர் அமைப்புகள், அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் இலங்கையில் முழுமையான, சுதந்திரம் உள்ள, அனைத்துலக விசாரணையை மீண்டும் கோரி உள்ளார்கள்.


இந்த அறிக்கையை விமர்சித்த முன்னாள் ஐ.நா மனிதநேயச் செயற்பாட்டாளாரான யோன் கோல்ம்சு ஐ.நா வேறு மாதிரி நடந்து இருந்தால் இலங்கை அரசு வேறு மாதிரி நடந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது அன்றைய சூழலை வைத்து எண்ணிப் பார்க்கையில் சாத்தியம் இல்லை என்று கூறி உள்ளார்.


மூலம்[தொகு]